89393 77777 | 89393 88888
sriannapooraniannadhanam@gmail.com

காசி க்ஷேத்ர மகிமை

'' காசிக்கு நிகரான பதியுமில்லை
கங்கைக்கு நிகரான நதியுமில்லை ''

என்று பாமரரும் பக்தியுணர்வோடு ஏற்றிப் புகழும் இந்தத் திருத்தலத்தைத் தரிசிப்பதற்குக் கூட, பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும்.


பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற ஆற்றல் மிக்க அபரித சக்தியையும், சிவஒளி சக்தியையும் கொண்ட ஒரே நகரம் காசி. மேலும், முனிவர்களும், தேவர்களும், மகரிஷிகளும் எப்பொழுதும் தவம் செய்து கொண்டு இருக்கும் புண்ணிய மகாக்ஷேத்ரம் இது. பூமி தோன்றிய காலத்திலேயே சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட முதல் நகரம் காசி. காவல் தெய்வங்கள் குடி கொண்டுள்ள காசி நகரம் முழுவதும் சிவகடாட்சமும், பிரணவஒளியும் நிரம்பி உள்ளது.


பூமியை உருவாக்கியபோது காசியின் மேல்தான் முதல் சூரிய கதிர் வீழ்ந்தது என்றும், சிவனும் பார்வதியும் மணம் முடித்ததும் பூமியில் வாழ ஓரிடம் தேடி வந்தபோது பிரளய காலத்திலும் அழியாத காசியையே தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்கள் கால் ஊன்றிய இடமே காசிதான் என்றும் காசி காண்டம் கூறுகிறது. காசி என்றால் பிரகாசிக்கும் பொருள் என்று அர்த்தம். காசியை அடைந்து அதனால் ஏற்படும் பிரகாசத்தின் மலர்ச்சிக்கு முன்பு, மற்ற எல்லாப் பிரகாசங்களும் மின்மினிப் பூச்சியின் பிரகாசம் போன்று ஆகிவிடுகிறது.


காசி வாசம் எல்லாப் பாவங்களையும் நாசம் செய்துவிடும். காசியில் வாசம் செய்பவரை தர்மமே காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஆறறிவுள்ள ஒருவன் கிடைத்தற்கரிய காசி வாசத்தை அனுபவித்த பிறகு அதை விடுவானா ? கிடைத்த ரத்தினத்தை வீசிவிட்டு, எவனாவது கண்ணாடிச் சில்லைக் கையில் எடுத்துக் கொள்வானா ?


பாவங்களைப் போக்கி மனிதனைக் குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்து, எஞ்சிய வாழ்வை அவனுக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக நல்வழியில் செலுத்தத்தக்க சக்தி கொண்டதுதான் கசித்தலமும் கங்கை நதியும்.


ஒருவன் வாரணாசியை விட்டு வேறு எங்காவது சென்றால் அது கிடைத்தற்கரிய அபூர்வ நிதியைத் தள்ளிவிட்டு, பிச்சை எடுத்துப் பணம் சேர்க்கச் செல்வது போன்றது. உலகில் பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், செல்வம், ஆகியவை எல்லாம் ஒவ்வொரு ஜன்மத்திலும் கிடைக்கும். ஆனால் காசி வாசம் எப்போதும் கிடைக்காது.


காசியில் ஸ்ரீராமகிருஷ்ணர் பெற்ற அசாதாரணமான தெய்வீகக் காட்சிகளும், அனுபவங்களும் சிவபெருமானின் மகிமையையும் காசியின் பெருமையையும் அவர் மனதில் ஆழப்பதிய வைத்தன. படகில் அவர் வந்து இறங்கியபோதிலிருந்தே சிவபுரியாகிய காசி, பொன்னால் ஆக்கப்பட்டிருப்பதை தமது அகக்கண்ணால் கண்டார். அங்கு கல்லோ, மண்ணோ எதுவும் இல்லை. எல்லாம் பொன்மயமாய் காட்சியளித்தன.


உலகில் வற்றாத ஜீவநதிகளில் புனிதத்துவம் பெற்ற கங்கை நதி காசியில் பாய்ந்தோடுவதால் சிறப்பு பெற்றது. இப்புனிதத்துவம் வாய்ந்த கங்கையில் நீராடுவதால் நமது பாவங்கள் நீங்கும்.


புனித கங்கை நதிக்கரையில் உள்ள மணிகர்ணிகாவில் நமது முன்னோர்கள் நினைவாக செய்யப்படும் பித்ரு ஹோமத்தால் அவர்கள் சிவலோகம் சென்றடைவதுடன், தமது வம்சத்திற்கும் நிறைவான ஆசியை பெற்று தருகிறார்கள். நமது முன்னோர்களுக்கு செய்யப்படும் திலஹோமம் வேறு எங்கும் செய்வதை விட மணிகர்ணிகாவில் செய்வதே சிறப்பு வாய்ந்ததாகும்.


புனித கங்கை நதியில் ஸ்நானம் செய்து, விஸ்வநாதரையும், விசாலட்சுமியையும் தரிசித்து, ஸ்ரீ அன்னபூரணியின் அருள் பெறுவது பூர்வ ஜென்ம புண்ணியம்.


வாழ்க்கையில் ஒருமுறையாவது காசி யாத்திரை செல்வது இந்துக்கள் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும்.


காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள்

காசியை வாழ்த்தும் நாவே நாவு

காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள்

காசியை இனிது காணும் கண்களே கண்கள்

ஹர ஹர கங்கே! ஜே ஜே கங்கே!